GIRIDHARAN

The happiness of your life depends on the quality of your thoughts.

Tales

Stories:4

வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது

பேரரசன் நெப்போலியன் பெருங்களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம்.அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து “உங்களுக்கு என்ன* வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் “மன்னா! எனக்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை” என்றான்.”உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித்தரச் சொல்கிறேன்” என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக்காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான்.அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான்.

அதற்கு மன்னன் நெப்போலியன், “உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்” என்றான்.அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து,

“சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?” என்று ஏளனம் செய்தார்கள்.அதற்கு அவன்,”நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை.

மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப்போகிறான்.காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான்.

உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்” என்றான்.

மற்ற தளபதிகள் “அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே” என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான்,

“நண்பர்களே, மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும்.

அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது.நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது.

ஆனால் நான் கேட்ட பரிசோ, இப்போது என் கையில்” என்றான்.

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள்.

யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

ஆம்,நண்பர்களே.,

அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய்,

பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது..

Stories : 3

கவலையைப் பற்றி மட்டுமே

 காட்டில் இருந்த அந்த சிங்கம் தன்னைத்தானே நொந்து கொண்டது.”எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற உறுதியான நகங்களும், பற்களும் இருந்தும் என்ன பயன்? நிம்மதியாய் இருக்க முடியவில்லையே!

கேவலம், இந்த சேவல் கூவும் சப்தம் என்னை நடுங்க வைக்கிறது. இம்மாதிரி பயந்துகொண்டே எத்தனை நாளைக்குத்தான் வாழ்வது?” என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டது.

அப்போது அங்கே வந்த யானை, ரொம்பக் கவலையோடு வேகமாய் காதுகளை முன்னும் பின்னும் அசைத்தது. அதைப் பார்த்த சிங்கம், “என்னப்பா, உனக்கு என்ன கவலை?

உன்னை எதிர்க்கும் அளவுக்கு எந்த பிராணியாவது இருக்கிறதா? உன் உடலைப் பார்த்தாலே எல்லாம் பயந்து ஓடுமே, நீ எதற்காகக் கவலையோடு இருக்கிறாய்?” என்று கேட்டது.

“இதோ, என் காதுக்கு அருகில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் போய் கொட்டினால், உயிர் போவது போல் வலிக்கும்.

அதற்காகத்தான் குளவி காதுக்குள் சென்றுவிடாமல் இருக்க, காதுகளை ஆட்டிக்கொண்டே வருகிறேன் என்றது யானை.”

யானை சொன்னதைக் கேட்டதும் சிங்கம் யோசித்தது.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. அதுபோன்ற கவலைதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், நான் கவலையை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டிருக்கிறேனே என்று நினைத்து வெட்கப்பட்டது.

அன்றுமுதல் கவலையை விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தது சிங்கம்.

இந்தக் கதையின் கருப்பொருள் என்னவென்றால்.

கவலையைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால்,
மற்ற இன்பங்கள் காணாமல் போய்விடும்.

கவலைகளை கனமாக தாங்கிக்கொண்டு, நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.

கவலைகளை நம்முடைய மனத்துக்குள்ளேயே போட்டு அழுத்தி வைக்க, வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி விடும்.

இதனால் கவலைகளாய் மனச்சோர்வும்,
மனச்சோர்வினால் மேலும் கவலைகளும் ஏற்படலாம்.

மன அழுத்தமும், கவலையும் இதய நோய் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே,

எதற்கு, எது காரணம் என்கிற ஆராய்ச்சியை எல்லாம் விட்டு விட்டுஇரண்டலிருந்தும் விலகி நின்று,

வாழ்க்கைப் பிரச்சினைகளை எப்படி

வெற்றிகரமாக சமாளிப்பது என அறிந்து மன மகிழ்வுடன்

வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.,

Stories :2

நீலக்கொக்கு – பூஜா

திப்பிராஜபுரம் அப்பிடின்னு ஒரு ஊர்.அந்த ஊர்ல பெரிய பணக்காரன் ஒருத்தன் இருந்தான்..அவன் பெயர் பெருந்தனன்.அவன் யாரையுமே திக்கமாட்டான்.யாருக்கும் எந்த உதவியும் செய்யமட்டான்.மிகவும் பேராசைக்காரன்.அதுவும் ஏழைகளை அவன் மதிக்கவே மாட்டான்.ரொம்ப கருமி.தான் பெரிய பணக்காரன்ற திமிரு அவனுக்கு.ஊர்லயும் யாருக்குமே அவன பிடிக்காது.

ஒரு சமயம் திடீர்ன்னு அந்த  ஊர்ல பஞ்சம் வந்திடுச்சு.குடிக்க தண்ணியும் இல்ல..சாப்பிட உணவும் இல்ல..ஆனாலும் அந்த ஊர் ஜனங்க ஒத்துமையா ஆண்டவன பஞ்சம் தீரவும்,எல்லோர்க்கும் சாப்பிடஉணவு கிடைக்கவும் தினமும் ப்ரே பண்ணினாங்க.யாரும் அந்த ஊரைவிட்டுப் போகணும்னு நினைக்கல.ஆனா இந்த பணக்காரன் பெருந்தனன் மட்டும் வெளியூருக்குப் போய் நிறைய சம்பாதிக்கணும்னுநினைத்தான்.தன்னோட மனைவியையும் ,மகனையும் ஊர்லயே இருக்கச் சொல்லிவிட்டு தான்மட்டும் பணம் சம்பாதிக்க புறப்பட்டான்.

ஊரைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டான் பெருந்தனன்.நடந்தே வந்ததால் மிகவும் களைப்பாகவும்,பசியாகவும்,தாகமாகவும் இருந்தது அவனுக்கு.எங்கேயாவது தண்ணீர் கிடைக்காதா என்று தேடிய அவனுக்கு கொஞ்ச தூரத்தில் இருந்த குளம் ஒன்று கண்களில் பட்டது.மிகுந்த ஆவலோடுஅக் குளத்தை நோக்கிப் போனான்.குளத்தை நெருங்கிய அவனுக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது.குளத்தின் கரையில் அவன் கண்ட காட்சியை அவனால் நம்பவே முடியவில்லை.அவன் வாய் தாமாகவே அகலத் திறந்து கொண்டது.கண்கள் மூட மறுத்தன.ஆம் அந்தக் காட்சியைக் கண்டு அவன் அதிசயத்துப் போனான்.

ஆம் அங்கே ஒரு கொக்கு..அதுவும் ஆகாய வண்ணத்தில் நீல நிறமாக.அதுவும் அது சாதாரணக் கொக்கு போல் இல்லாமல் உருவத்தில் மிகப் பெரியதாக இருந்தது.அது மட்டுமல்லாது அதன்உடல் முழுவதும் தங்க,வைர,முத்துக்களால் செய்யப்பட்ட நகைகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன.நகைகளால் அந்தக் கொக்கின் உடம்பே டாலடித்தது.அதன் முதுகில் பட்டாலான ஆடையொன்று ர்த்தப்பட்டிருந்தது.அந்தப் பட்டாடையிலும் தங்கமும் வைரமும் முத்தும் பவளமும் மின்னின.”ஆ”வென்று அக்கொக்கை பார்த்த பெருந்தனனுக்கு மயக்கமே வரும் போல் இருந்தது.அவனின்

பேராசை மனது வேலை செய்ய ஆரம்பித்தது.என்ன திட்டம் போட்டானோ அவனுக்குத்தான் தெரியும்.சட்டென ஆ,அம்மா,ஐயோ என்று கத்தியபடி கீழேவிழுந்தான்.எல்லாம் அந்தக் கொக்கின் கவனத்தைத் தன்பால் திருப்பத்தான்.இவன் திட்டம் பலித்தது.சட்டென அந்தக் கொக்கு சத்தம் வந்ததிசையை நோக்கித் திரும்பிப் பார்த்தது.பாவம் அந்தக் கொக்கு.மிகவும் நல்ல கொக்கு போலும்.கீழே விழுந்தவனை நோக்கி ஓடி வந்தது.கொக்கு தன்னை நோக்கி ஓடி வருவதை லேசாகக் கண்களைத் திறந்து பார்த்த ருந்தனன்..ம்ம்ம்அம்மா..பசியும் தாகமும் தாங்க முடிய வில்லையே..தண்ணீர்..தண்ணீர்..என்று முனகினான்.

அவனின் அருகில் வந்த கொக்கு அவன் தண்ணீர்..தண்ணீர் என்று முனகுவதைப் பார்த்து பாவப்படது.கிடுகிடுவென குளத்தை நோக்கி ஓடியது.தன் நீண்ட அலகில் தண்ணீரை எடுத்துக்கொண்டு இவனிடம் ஓடி வந்தது.கொக்கு தண்ணீர் எடுத்துவருவதைப் பார்த்த அவன் வாயைத்திறந்தபடி படுத்துக்கிடந்தான்.ஓடி வந்த கொக்கு இவனின் வாயில் தண்ணீரை ஊற்றியது,கொஞ்சம் நீரை முகத்தில் பீய்ச்சியது.மயக்கம் தெளிந்தவன் போல சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டான் பெருந்தனன்.முகத்தை நல்லவன் போல் வைத்துக்கொண்டு கைகளைக்கூப்பி கொக்கே உன்னைப் பார்த்தால்தெய்வக் கொக்கு போல் இருக்கிறது.சரியான சமையத்தில் என்னைக் காப்பாற்றினாய்..எப்படிஉனக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.இந்த உதவியை என் ஆயுள் உள்ளவரை மறக்க மாட்டேன் என்றான்.வேண்டுமென்றே கண்களில் கண்ணீரை வரவழைத்துக்கொண்டான்.

பரவாயில்லை..மனிதா..நன்றியெல்லாம் சொல்ல வேண்டாம்..ஆபத்தில் உதவுவதுதானே ஒவ்வொருவரின் கடமை….என்றது கொக்கு.அட இது என்ன கொக்கு பேசுகிறதே என்று அதிசயத்துப்போனான் பெருந்தனன்.இந்தக் கொக்கை எப்படியாவது ஏமாற்றி இது அணிந்திருக்கும் நகைகளையெல்லாம் அபகரித்துக் கொண்டு சென்று விடவேண்டும் என்ற பேராசை அவன் மனதில் எழுந்தது.எப்படியாவது கொக்கோடு நட்பு ஏற்படுத்திக்கொள்ள நினைத்தான்.கொக்கு பாவம் இவனின்கெட்ட எண்ணத்தை அறியாமல் மேலும் பேச ஆரம்பித்தது.

மனிதா..உங்களைப் பார்த்தால் வெகு தூரத்திலிருந்து வருவதுபோல் தெரிகிறது..ஏன் இப்படி கால் நடையாக வந்தீர்கள்..என்று கேட்டது.கிடைத்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என நினைத்த பெருந்தனன் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக்கொண்டு என் உயிரைக்காப்பாற்றிய கொக்கே என் சோகக்கதையைச் சொல்கிறேன் கேள்.நான் ஒரு ஏழை விவசாயி…எங்கள் ஊரில் கடும் பஞ்சம் .பிழைக்க வழி இல்லை.என் மனைவியும் மகனும் நானும் பல நாளாய் பட்டினி கிடக்கிறோம்.ஆடு மாடுகளெல்லாம் தீவனமின்றி இறந்து விட்டன.அதனால் எங்கேயாவது வேலை கிடைக்காதா? பணம் கிடைக்காதா என்று தேடி வந்தேன்.

பல நாள் பட்டினியால் என் உடலில் தெம்பில்லை..அதனால்தான் நான் மயங்கி வீழ்ந்துவிட்டேன் என்றான் மிக ஈனஸ்வரத்தில் கொக்கு நம்பவேண்டும் என்பதற்காக.கொக்கின் மனம் இவனின் கதைகேட்டு மிகவும் இளகி விட்டது.ஐயோ பாவம் இந்த மனிதனுக்குஉதவ வேண்டும் என எண்ணியது.கவலைப் படாதே என் ஆறுதல் கூறியது.கண்களை மூடிக்கொண்டு ஏதோ மந்திரம் சொல்வது போல் சொன்னது.அடுத்த நிமிடம் ஓர் அழகியதேவதை ஒன்று அங்கே தோன்றியது.அதன் கையில் மந்திரக்கோல் இருந்தது.மகனே என்னை ஏன் அழைத்தாய் என்று கொக்கைப் பார்த்து கேட்டது அந்த தேவதை.தாயே..இதோ இருக்கிராறே இவர் வாழ்க்கையை நடத்த முடியாமல் பெரும் துன்பத்தில் இருக்கிறார்.

இவருக்கு உதவவேண்டுமென நான் விரும்புகிறேன்..அதற்கு நீங்கள்தான் தாயே உதவ வேண்டும் என்றது கொக்கு.மகனே..உன் எண்ணம் உயர்வானது..ஆனால் மனிதர்களை நம்புவது அவ்வளவு நல்லதல்ல என்றது தேவதை.ஆனால் கொக்கு பிடிவாதமாய் இருந்ததால்..தேவதையால் செய்யாமல் இருக்க டியவில்லை.வேறு வழியின்றி பெருந்தனனுக்கு உதவ முன்வந்தது.கையில் இருந்த மந்திரக்கோலால் காற்றில் ஒரு வட்டம் போட்டது.என்ன அதிசயம் அங்கே ஒரு மாட மாளிகையும் ஒரு மூட்டை நிறைய தங்க வைர நகைகளும் ஏராளமான பசுக்களும்,ஆடுகளும்பெட்டிபெட்டியாய் தங்கக் காசுகளும் தோன்றின.கொக்கு எல்லாவற்றையும் பெருந்தனனை எடுத்துக்கொள்ளச் சொன்னது.

பெருந்தனனுக்குத் தாங்க முடியாத சந்தோஷம்.தன் மனைவி,மகனையும் அழைத்துவந்து வாழத் துவங்கினான்.கொக்கும் அடிக்கடி அவன் வீட்டிற்கு வந்து பொழுதைக் கழித்துவிட்டுச் செல்லும்.பேராசை கொண்ட பெருந்தனனுக்கு இவ்வளவு செல்வம் கிடத்தும் போதவில்லை.அவன் நோக்கம் கொக்கின் உடலில் இருக்கும் நகைகளைக் கைப்பற்றுவதாகவே இருந்தது.அதற்கான நேரத்திற்காக காத்திருந்தான்.பாவம் கொக்குக்கு இவ்னின் கெட்ட எண்ணம் தெரியவில்லை.அவனை நல்லவன் என்றே நம்பியது. பெருந்தனன் தன் மனைவி, மகனோடு சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினான்.

அன்று வழக்கம் போல கொக்கு பெருந்தனன் வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டிருந்தது.தீய எண்னம் கொண்ட பாவி பெருந்தனன் கொக்கை வஞ்சகமாகப் பேசி ஆள் நடமாட்டமில்லாத ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான்.கொக்கு சற்றும் எதிர்பாராத நிலையில் தன்னோடு வந்திருந்த மகனை கொக்கின் கால்களைப் பிடித்துக்கொள்ளச்சொன்னான் மனைவியை அதன் உடலைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளச் சொன்னான்.கொக்குக்கு ஒன்றும் புரியவில்லை.எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் என்று பதறிப்போய் கேட்டது.ஹோ..ஹோ..என்று சிரித்துக்கொண்டே அதன் உடலிலிருந்து ஒவ்வொரு நகையாய்க் கழற்ற ஆரம்பித்தான் பெருந்தனன்.உன்னைக் கொல்லப்போகிறேன் என்றான் கொஞ்சமும் இரக்கமில்லாமல்.பயந்து போனது அந்த கொக்கு.மனிதனை நம்பாதே என்று தாய் சொன்னது நினைவுக்கு வந்தது.மனதுக்குள் தாயை நினைத்தது.

அடுத்த நொடி அதன் தாய் தேவதை அங்கே தோன்றியது.அதற்கு பெருந்தனனும் அவன் மனைவி,மற்றும் மகன் செய்யப்போகும் கொடுஞ்செயல் புரிந்துபோயிற்று.பெரும் சினம் கொண்டது.கையில் இருந்த மந்திரக்கோலால் மூவரையும் தொட்டது.மூவரும் தள்ளிப்போய் கீழே விழுந்தனர். உங்களுக்கு உதவி செய்த என் மகனைக் கொல்ல நினைத்து செய்னன்றி மறந்தீர்கள்.உங்களை உண்மையானவர்கள் என்று நம்பி நட்போடு பழகிய என் மகனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தீர்கள். நீங்கள் மூவரும் இனி வாழத் தகுதியற்றவர்கள்.நீங்கள் மூவரும் கருங்கல்லாய் மாறக்கடவது என உங்களைச் சபிக்கிறேன்.இந்தக் குளத்திற்கு குளிக்க வருபவர்கள் இனி கருங்கல்லாய் மாறிய உங்கள் மீது தங்கள் துணிகளை அடித்துத் துவைப்பார்கள்.அந்த அடி உங்களுக்கு வலிக்கும். நீங்கள் வலி தாங்காமல் கத்துவீர்கள். அனால் யாருக்கும் உங்களின் கத்தல் கேட்காது.நீங்கள் காலம் காலமாய் இந்த தண்டனையை அனுபவிப்பீர்கள் என்று சாபமிட்டது.அடுத்த கணம் மூவரும் கருங்கல்லாய் மாறி குளத்துத் தண்ணீர் அருகே போய் விழுந்தனர்.கொக்கு தன் தாயோடு பத்திரமாய் சென்றது.

செய்நன்றி மறந்தவர்க்கும்,நம்பிக்கை துரோகம் செய்பவர்க்கும்,பேராசை கொண்டவர்க்கும் இதுதான் கதி.

Stories :1

முட்டாளும் புத்திசாலியும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.

இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், ‘நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக் கேட்டது.

‘நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது ஏரித் தவளை.

‘ஏரியா? அப்படியென்றால் என்ன?’ எனக் கேட்டது கிணற்றுத் தவளை.

‘இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு’ என்றது ஏரித் தவளை.

‘இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?’ என்று கேட்டது கிணற்றுத் தவளை.

‘இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி’ என்றது ஏரித் தவளை.

கிணற்றுத் தவளை நம்பவில்லை. ‘நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது’ என்றது.

ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து ‘நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து’ என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.

அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: