சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார். டிஸ்லைக் பட்டன் பரிவு அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்துவதற்கான வழியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இணைய உலகின் முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையாக பேஸ்புக் விளங்குகிறது. பேஸ்புக்கில் வெளியாகும் பதிவுகள் மற்றும் கருத்துக்களை லைக் செய்யும் வசதி பயனாளிகளிடம் பிரபலமாக இருக்கிறது.பேஸ்புக் பயனாளிகள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவதற்கான எளிய வழியாக லைக் வசதி அமைந்துள்ளது. குறிப்பிட்ட பதிவுக்கு அதிக லைக் கிடைப்பது என்பது அதன் செல்வாக்கிற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.

லைக் பட்டன் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் எல்லா சூழல்களுக்கும் அது பொருத்தமானதாக இல்லை. சோகமான மற்றும் எதிர்மறையான பதிவுகளுக்கு கூட பயனாளிகள் லைக் செய்யும் தன்மை பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பேஸ்புக்கில் லைக் பட்டன் போலவே டிஸ்லைக் பட்டன் தேவை எனும் கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், டிஸ்லைக் வசதியை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் பயனாளிகளுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க், பலரும் பல ஆண்டுகளாக டிஸ்லைக் பட்டன் வசதி தேவை என கோரி வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் இது பற்றி கேட்டுள்ளனர். இன்று மிகவும் விசேஷமான நாள். ஏனெனில் இந்த வசதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை இன்று அறிவிக்கிறேன்” என்று கூறினார்.

எனினும் இந்த டிஸ்லைக் பட்டன் வசதி எதிர்மறையான தன்மையில் பயன்படுத்தும் வகையில் இருக்காது என்றும் மார்க் கூறியுள்ளார்.

மற்றவர்களின் பதிவுகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்காக அல்லாமல்,சோகமான கருத்துக்கள் கொண்ட பதிவுகளை பார்க்கும் போது இந்த வசதி பயன்படுத்தப்படுவது பொருத்தமாக இருக்கும் என்றார் அவர்.
பயனாளிகள் பரிவு அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்தவே இந்த வசதியை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
எல்லா தருணங்களுமே மகிழ்ச்சியானவை அல்ல,ஒருவர் சோகமான ஒன்றை பகிர்ந்து கொண்டால் அதை லைக் செய்வது ஏற்றதாக இருக்காது என்றும் கூறிய மார்க் ,நண்பர்கள் மற்றும் மக்கள் இந்த உணர்வுகளை புரிந்து கொள்ளவும், சோகத்தை உணரவும் முடிகிறது என்பதை வெளிப்படுத்தும் வழியை விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.

Advertisements