உங்களுக்கு சொந்தமாக ஒரு இணையதளம் வேண்டுமா? அதுவும் அவசரமாக உடனே வேண்டுமா? கவலையை விடுங்கள் அந்த இணையதளத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் தெரியுமா? 1பேஜ்பார்டி இணையசேவை , இதற்கு கைகொடுக்கிறது.

இணையதளத்தை உருவாக்கி கொள்வது என்ன அத்தனை சுலபமா? அதற்கு கோடிங் தெரிய வேண்டாமா? எச்டிஎம்.எல் என்று எதோ சொல்கின்றனரே அதில் கொஞ்சமாவது பரிட்சயம் தேவையில்லையா என்றெல்லாம் குழம்ப வேண்டாம்.

இவை எதுவும் தெரியாமலே யார் வேண்டுமானாலும் இணையதளம் அமைத்துக்கொள்ள வழி செய்கிறது இந்த இணைய சேவை. அதாவது ஒரு பக்க இணையதளத்தை அமைத்துக்கொள்ள வழி காட்டுகிறது.
இந்த சேவையை பயன்படுத்தி இணையதளம் அமைப்பது மிகவும் சுலபமானது. இணையதளம் உருவாக்கி கொள்ள விரும்புகிறவர்கள், இந்த தளத்திற்குள் நுழைந்து அதன் முகப்பு பக்கத்தில் கர்சரை வைத்தால் போதும். அந்த இடத்தில் சிறிய கட்டம் தோன்றுகிறது. அதில் இணையதளத்திற்கான வாசகங்களை டைப் செய்ய வேண்டியது தான். ஒரு தலைப்பு கொடுத்து விட்டு அதன் கீழ் தேவையான வரிகளை அடித்து விட்டு கிளிக் செய்தால் போதுமானது. எழுத்துக்களை பெரிதாக்குவது, புகைப்டத்தை இணைப்பது போன்ற வசதிகளும் இருக்கின்றன. அடுத்ததாக அதே பக்கத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் கர்சரை கொண்டு சென்று அங்கும் தகவலகளை இடம்பெற வைக்கலாம்.

இப்படியாக இந்த தளத்தில் டைப் செய்து வடிவமைப்பது மூலம் முழு இணையதளத்தையும் உருவாக்கி விடலாம். அந்த பக்கத்தை அப்படியே சேமித்து கொள்ளலாம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் , இந்த இணையதளம் ஒரே ஒரு பக்கத்தை கொண்டதாக இருக்கும் என்பது மட்டும் தான் ஒரே குறை. மற்றபடி நீங்கள் விரும்பிய வகையில் நிமிடங்களில் ஒரு இணையதளத்தை உருவாக்கி விடலாம்.
இந்த ஒரு பக்க இணையதளத்தை அவரவர் தங்கள் தேவை மற்றும் கற்பனைக்கு ஏற்ப உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்களும் முயன்றுப்பாருங்கள்.

எல்லாம் சரி, ஒரு பக்க இணையதளத்தில் என்ன செய்துவிட முடியும் என நினைக்கிறீர்களா? எனில் ஒன் பேஜ் லவ் (https://onepagelove.com/) இணையதளத்தை பார்த்து ஊக்கம் பெறலான். இணைய உலகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பக்க இணையதளத்தை எல்லாம் பட்டியலிட்டு அடையாளம் காட்டுகிறது இந்த இணையதளம்.

Advertisements