செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்காகவே உருவான லாப நோக்கற்ற நிறுவனம் மார்ஸ் ஒன். நெதர்லாந்தைச் சேர்ந்த மார்ஸ் ஒன், செவ்வாய்க்குச் செல்ல விரும்புவோருக்கு இணையத்தின் மூலம் தேர்வு நடத்தியது. உலகெங்குமிருந்து இரண்டு லட்சம் பேருக்கும் மேல் marsவிண்ணப்பித்தனர். இவர்களை வடிகட்டி, 100 பேரை சமீபத்தில் இறுதி செய்திருக்கின்றனர். அதில் இந்தியர்கள் மூன்று பேர் தேர்வாகி உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மத்திய புளோரிடா பல்கலைக்கழக்த்தில் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்து வரும் தரஞ்ஜித் சிங் பாட்டியா என்ற 29 வயது இளைஞரும், துபாயில் வசிக்கும் 29 வயது ரித்திகா சிங் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 19 வயது ஷ்ரத்தா பிரசாத் ஆகிய மூவரும் தான் அந்த இந்தியர்கள்.
இந்த 100 பேரில் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், 2024ல் செவ்வாய்க்கு அனுப்பப்படுவர். இறுதிச் சுற்றுக்கு அழைக்கப் பட்டவர்களிடம், இந்த நெடும் பயணத்தில் உள்ள ஆபத்துகளை உணர்ந்திருக்கின்றனரா என்பதை சோதித்தனர். விஷயம் என்னவெனில், செவ்வாய்க்கு கொண்டு போய் விடுவது மட்டும்தான் மார்ஸ் ஒன் நிறுவனத்தின் பொறுப்பு.
எனவே, இது ஒரு வழிப் பயணம் மட்டுமே. இதில் பலரும், நாம் எல்லாரும் ஒரு கட்டத்தில் இறப்பது உறுதி. எனவே, எதற்காக உயிரை விடுகிறோம் என்பதுதான் முக்கியம் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளனர்.
நேர்முகத் தேர்வின்போது வந்தவர்கள் பலர் மன உறுதி கொண்டவர்களாக இருந்தனர். இறுதிச் சுற்றுக்கு ஆட்களைத் தேர்வு செய்வது எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது என்கிறார் மார்ஸ் ஒன்னின் தலைமை மருத்துவ அதிகாரியான நோர்பெர்ட் க்ராப்ட். வாழ்க்கையையே மாற்றப்போகும் இந்தப் பயணத்தின்போது பங்கேற்பவர்கள் குழுவாகச் செயல்படுவதற்கு ஏற்றவர்களா என்பதும் சோதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, செவ்வாயில் உள்ளதுபோலவே சூழலை உருவாக்கி, அதில் ஏற்படும் சிரமங்களை போட்டியாளர்கள் எப்படித் தாங்குகின்றனர் என்பதை சோதிப்பர். பிறகு ஏழு வருட கால பயிற்சிகள் தரப்படும்.
இப்படி ஒரு வழிப் பயணத்துக்கு எப்படி இவர்கள் ஏற்பாடு செய்யலாம் என்பது பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலும், மனித குலத்திற்கு முன்னோடியாக இருப்பதில் பெருமையும் ஆர்வமும் இருப்பதாலும்தான் இந்த சகாப்தம் மிக்க பயணத்திற்கு முன் வந்ததாகத் தெரிவித்தனர்.
கோயமுத்தூரிலுள்ள அம்ரிதா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் ஷ்ரத்தா, லட்சக்கணக்கானவர்களுக்கு மத்தியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமைப்படுகிறேன். என் பெற்றோருக்கும் இதில் மகிழ்ச்சி தான் என்று சொல்லியிருக்கிறார்.